காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம்! - சீமான் கடும் கண்டனம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி அவர்களின் தலை முடியை இழுத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மதுபோதையில் இருந்ததே இக்கொடுந்தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனும்செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை உயர் பெண் அதிகாரி ஒருவரே பட்டப்பகலில் தாக்கப்படும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. கார் பந்தயம் போன்ற ஆடம்பரங்களில் கவனம் செலுத்துகின்ற அரசால் எப்படி காவல்துறையைச் சீரமைப்பதில் கவனம் செலுத்த முடியும்?
நாட்டில் நடக்கும் அனைத்து சமூகக் குற்றங்களின் ஆணிவேராக இருப்பது மது போதைதான் எனும் நிலையில்
மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசின் பொறுப்பற்றதனமே காவல்துறை உயரதிகாரியே தாக்கப்படுமளவிற்கு நிலைமை மோசமடைய முதன்மைக்காரணமாகும். ஆனால், கார் பந்தயத்தில் மதுவிளம்பரங்கள் மூலம் வருமானம் பார்க்கத் துடிக்கும் அளவிற்கு மிகத்தவறான நிர்வாகமுடைய திராவிட மாடல் அரசிடம் எப்படி நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும்?
ஆகவே, காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி அவர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சமூகக் குற்றங்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த முதலில் திமுக அரசு இதற்கு மேலாவது மதுவிற்பனையைக் கைவிட்டு, மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
0 comments: