நிலவுரிமையைக் காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்!
செந்தமிழன் சீமான் வலியுறுத்தல்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மையாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால், போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை திராவிட மாடல் திமுக அரசு ஒடுக்கி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இன்று ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், பொதுமக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கி ஒடுக்குவது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
சனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதிமறுத்து திமுக அரசு வழக்கு பதிவதென்பது வெட்கக்கேடானதாகும்.
மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா?
எனவே, தமிழ்நாடு அரசு ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் விடுவிக்க வேண்டுமெனவும், தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாகச் செவி சாய்க்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
0 comments: